சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-1

சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-1

 

 

சங்க இலக்கியத்தில் மலை சார்ந்த பகுதிகளை குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர். தமிழகத்தில் குறிஞ்சி நிலம் அமைந்த மாவட்டங்கள் சில உண்டு. அதில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் விரிந்து கிடக்கும் சவ்வாது மலைத் தொடர்களும் அடங்கும்.

ஒரு காலத்தில் சந்தன மரங்கள் நிரம்பி வழிந்த சவ்வாது மலைத் தொடரில் இன்று பெயருக்கு சந்தன மரங்கள் தென்படுகின்றன.

மொத்த நிலப்பரப்பில் குறைந்தது 33 விழுக்காடு காடுகள் உறுதியாகக் காப்பாற்றப்பட வேண்டும் என அறிவியல் எச்சரிக்கிறது. ஆனால் இந்தியாவில் 17 விழுக்காடு காடுகள் தான் உள்ளன. அதிலும் அடந்த காடுகள் 11 விழுக்காடு தான். நீர் ஆதாரத்துக்குக் காடுகள் தான் முக்கியம். உயிர்க்காற்றான பிராணவாயு உற்பத்திக்கு மரங்கள் தான் முதன்மைத் தொழிற்சாலை என்றாலும் காடுகளின் முக்கியம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளன.

சவ்வாது மலைத்தொடர்களைப் பற்றியும் அங்கே வசிக்கும் மலையாளி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தமிழ் பேசும் பழங்குடியினர் பற்றியும் களஞ்சியம் வாசகர் ஒருவர் நம்மிடம் விவரித்த போது நமக்குள் வியப்பு மேலிட்டது.

சவ்வாது மலைத்தொடரில் பழங்குடியினர் வசிக்கும் சில சிற்றூர்களுக்குப் பயணம் மேற்கொண்டு கட்டுரை எழுத முடிவு செய்து கொண்டு பேருந்து ஏறினோம். முதலில் சென்னையிலிருந்து வேலூர் சென்றோம். அங்கிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 25வது கிலோ மீட்டரில் இருக்கிறது கண்ணமங்கலம் பேரூராட்சி. அங்கு இறங்கி நஞ்சுகொண்டாபுரம் கல்பட்டு வழியாக அமிர்தி வனவிலங்கு சரணாலயம் நோக்கி வந்தோம்.

மலையின் அடிவாரத்தில் இருக்கிறது சரணாலயம். இந்த சரணாலயத்தை ஒட்டி உயரே அழைத்துச் செல்லும் அகலம் குறைந்த தார்ச்சாலையைக் காட்டி சவ்வாது மலைத்தொடர்களுக்குச் செல்லும் பாதைகளில் இதுவும் ஒன்று என்றனர். இப்பாதை வழியே மலைக்குச் செல்ல நாள்தோறும் ஒரு சிறிய பேருந்து இருவேளை சென்று வருவதாகத் தெரிவித்தனர். திருப்பத்தூர் சாலை வழியாக மலை ஏறினால் பேருந்துகள் வசதி கூடுதலாக உள்ளன என்பதைத் தெரிந்து கொண்டாலும்… இப்பாதை வழியிலேயே மலையை நோக்கிய நமது நடை பயணம் தொடங்கியது.

வெளியாட்களின் நடமாட்டம் அதிகமில்லாத வெறிச்சோடிய அந்தப் பாதையில் புதிய பட்டறிவைப் பெறும் உற்சாகத்தோடு நம் பயணத்தைத் தொடங்கினோம். இரு பக்கமும் நம்மை வரவேற்றன காட்டுவகை மரங்கள். ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்திருப்போம் காட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டார் ஒரு நபர். நம்மை உற்று நோக்கியவாறு வந்த அவர் நாம் வெளியூர் ஆள் அன்பதை உடனே தெரிந்து கொண்டு அதிகாரத் தோரணையோடு “யார் நீங்கள்.. எங்கிருந்து… ஏன் வருகை” என்பன போன்ற வினாக்களைத் தொடுத்தார்.

மலை சிற்றூர்களுக்குச் செல்கிறேன் என்றதும் திடுக்கிட்டவர் போல்.. வேண்டாம் உங்கள மாதிரி பேண்ட் சட்டைப் போட்ட ஆட்களைக் கண்டா அவுங்க பதுங்கிடுவாங்க. பேச மாட்டாங்க. அதோட முரடங்களும் கூட. வீட்டுக்கு ஒரு கள்ளத் துப்பாக்கி வெச்சிருப்பாங்க. காளி வழிபாடு செய்றவங்க. ஒரு சிலர் மாந்திரீகம் செய்யக் கூடியவங்க.

உங்களுக்கு மலை மேல் பயணிக்க ஆசை இருந்தால் இங்கேருந்து சமுனாமுத்தூர் போங்க. அதுக்கு நிறைய பஸ் இருக்கு. அங்கு நிறைய கடைங்க இருக்கு. மலசாதிக்காரங்க அங்க மலைத்தேன், ,மலைப்புளி, பழங்கள் விப்பாங்க. இவ்ளோ தூரம் வந்துட்டீங்க. அங்க போய் எதையாவது வாங்கிட்டு வீடு போய் சேருங்க. இந்தப்பக்கம் போறது வீண் வேலை என அச்சமூட்டினார்.

அவரது அறிவுரையைப் புறக்கணித்த நாம் முன்வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்ற முடிவோடு பயணத்தைத் தொடர்ந்தோம். அடுத்து நாம் பார்த்தது…

தொடரும்…

About யாணன்

சொந்த ஊர் என எதையும் சொல்வதில்லை. உண்மையில் சொந்தம் என்று எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில காலம் சில, சொந்தமானவைப் போல் தொடருகின்றன. பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான் மரங்களில் தான் பார்க்கிறேன். என்னைத் தூண்டும் சக்தியாக மரங்கள் இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேலான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். மரணத்திற்கு முன்பாக மேலும் பல நடக்கூடும். நான் எழுதும் ஆத்ம ஞான கருத்துகளே எனது அழமான நம்பிக்கை. அதுபோலவே எனது வாழ்க்கையையும் உணருகிறேன்.

5 Responses »

  1. பகிர்வுக்கு நன்றி யாணன்.

    கூகுல் தேடு பொறியில் எதேச்சையாக உங்கள் பதிவுக் கிடைத்தது. இப்போதுதான் படிக்கத் தொடங்குகின்றேன்….!
    நன்றாய் இருக்கிறது. எனது பாராட்டுகள்…பல!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s